Friday, September 10, 2010

துரோகம்


திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் அன்பு தண்டபாணி, அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால், சீதாலட்சுமி, 5ம் தேதியே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்து விசாரணையை துவக்கினர்.

அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளியை தேடினர். கொலையுண்ட சீதாலட்சுமியின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை துவங்கியது. ஆரம்பத்தில் குழம்பிய போலீசாருக்கு மொபைல் போன் மூலம் கிடைத்த விவரங்கள் விசாரணையை வேகப்படுத்தியது. சீதாலட்சுமி போனுக்கு, ஆக., 5ம் தேதி காலை முதல் மாலை 6.00 மணி வரை ஒரே எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்துள்ளது; அந்த எண்ணுக்குரிய நபரின் முகவரி குறித்து விசாரித்தனர். அந்த எண், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரமேஷ் என்பது தெரிந்தது. போலீசார், ரமேஷ் வீட்டுக்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அதே, ஆகஸ்ட் 5ம் இரவு 10.00 மணிக்கு தன் நண்பர் மாதேஷ் உடன் பைக்கில் சென்ற ரமேஷ், அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. அவினாசி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர். விபத்தில் பலியான ரமேஷுக்கும், கொலையான சீதாலட்சுமிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை துவங்கியது.

விபத்தில் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதேஷிடம், போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ஆனால், விசாரணையில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க முடியாதவாறு மாதேஷ், கோமா நிலைக்கு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியுற்ற போலீசார், சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில் விசாரித்தனர். அதில், பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகின.

கொலையான சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில், லேபர் கான்ட்ராக்டராக ரமேஷ் பணியாற்றியுள்ளான். ஓராண்டாக காதலித்த இருவரும், ஊட்டி, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றியுள்ளனர். ரமேஷை தன் கணவனாகவே பாவித்த சீதாலட்சுமி, அவனின் தங்கை திருமணத்துக்கு பணமும், செலவுக்கு தன் நகைகளையும் கொடுத்துள்ளார். ரமேஷ் வீட்டில், அவனுக்கு பெண் பார்க்கத்துவங்கியதும் சீதாலட்சுமியை கழற்றி விட திட்டமிட்டான். பல நேரத்தில் இதுகுறித்து ரமேஷ் பேசியபோது, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சீதாலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்ட ரமேஷ், ஆகஸ்ட் 5ம் தேதி அவளை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறி, பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டுக்கு அழைத்துச் சென்றான். பொங்குபாளையம் - கணக்கம்பாளையத்தில் உள்ள பழனிசாமி தோட்டம் பகுதிக்கு அழைத்து வந்தான். அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கத்தியால், அன்று இரவு 7.45 மணிக்கு அவளது வயிறு மற்றும் கழுத்தில் குத்தியுள்ளான். அவள் இறந்ததை உறுதிப்படுத்தி விட்டு, அங்கிருந்து வீட்டுக்குச் சென்றான். கொலை செய்தபோது அணிந்திருந்த சட்டையை கழற்றி, பைக்கில் வைத்து விட்டு, வேறு சட்டையை அணிந்து புறப்பட்டான். அவினாசி ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் ரத்தக்கறை படிந்த சட்டையை போட்டான். பின், நண்பர்கள் ஜெயராஜ், செல்வமணி, மாதேஷ் ஆகியோருடன் மதுக்கடைக்குச் சென்று மது குடித்துள்ளான். அங்கிருந்து மாதேஷை மட்டும் ஏற்றிக் கொண்டு, தெக்கலூர் சென்றபோது, அவினாசி - ஆட்டையாம் பாளையம் அருகே லாரி மோதி இறந்தான்.

ஒரே பனியன் நிறுவனத்தில் வேலை செய்த இருவரும் பழகி, பல ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவ்வப்போது சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்ற ரமேஷ், நகைகளை வாங்கி அடமானம் வைத்து செலவு செய்துள்ளான். கொலை நடந்த அன்று காலை கூட, திருப்பூரில் உள்ள பிரபல வங்கிக்குச் சென்று பணம் எடுத்துள்ளான். இதை வங்கியில் உள்ள கேமரா மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் காவல்துறையினர். அவன் அணிந்திருந்த சட்டையை ரத்தக்கறையுடன் குப்பை தொட்டியில் இருந்து கைப்பற்றியிருக்கிறார்கள். கொலை நடந்த ஆகஸ்ட் 5ம் தேதியும், அதற்கு முந்தைய ஒரு வாரத்திலும் சீதாலட்சுமி தன் மொபைல் போனில் இருந்து ரமேஷ் எண்ணை தவிர வேறு யாருக்கும் போன் செய்யவில்லை. ஆகஸ்ட் 5ம் தேதி காலையில் இருந்து மாலை வரை இருவரும் 900 வினாடி, 1,500 வினாடி, 700 வினாடி என்று இடைவிடாமல் பேசி உள்ளதை உறுதி செய்துள்ளனர். ரமேஷை கணவன் போல் எண்ணி வாழ்ந்த சீதாலட்சுமிக்கு, அவன் திருமணம் செய்து கொள்வது பிடிக்கவில்லை. கூடுமானவரைக்கும் சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷுக்கு, அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்த வெறுப்பு கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.

கொலை நடந்த இரவு 7.02 மணி முதல் 8.00 மணி வரை ரமேஷûக்கு, அவனது நண்பர்கள் தொடர்ந்து போன் செய்துள்ளனர். ஆனால், அவன் போனை எடுக்கவில்லை. இரவு 8.15 மணிக்கு, "மிஸ்டு காலில்' இருந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு ரமேஷ் பேசியுள்ளான். அதன் பிறகே நண்பர்களுடன் குடித்து விட்டு, பைக்கில் சென்று லாரியில் மோதி இறந்தான். கள்ளக்காதலி சீதாலட்சுமியை கொலை செய்த ரமேஷ், அடுத்த இரண்டரை மணி நேரத்தில் விபத்தில் இறந்தது ஆச்சரியமாகவே உள்ளது.

கணவனுக்கு துரோகம் இழைத்த சீதாலட்சுமி கொலையான இரண்டரை மணி நேரத்தில் நடந்த விபத்தில் ரமேஷ் உடல் நசுங்கி இறந்துள்ளான். கள்ளக்காதலுக்கு உதவிய ரமேஷின் நண்பன் மாதேஷ், சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி இறந்து விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment: