Friday, February 5, 2010நேற்று போபால்.. நாளை கடலூர் ?

போபால் விஷ வாயு விபத்து நிகழ்ந்து 25 வருட்ங்கள் ஆகின்றன.

ஆனால் இன்னமும் அந்த வழக்கின் முதல் குற்றவாளியான யூனியன் கார்பைட் கம்பெனியின் தலைவர் ஆண்டர்சனை இந்திய நீதி மன்றத்தின் முன்பு கொண்டு வந்து நிறுத்த முடியவில்லை.

24 வருடங்கள் முன்னால் கைதாகி ஜாமீனில் வெளியே வந்ததுமே அமெரிக்காவுக்கு தப்பி ஓடினான் ஆண்டர்சன். இந்திய நீதி மன்றம் ஆண்டர்சனை வரவழைக்க சம்மன் பிறப்பித்தும் கூட, நடவடிக்கை எடுக்க இந்திய அரசும் அமெரிக்க அரசும் தயாராக இல்லை. ஆண்டர்சனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து நிறுத்தினால், அதனால் வெளி நாட்டு முதலீடுகள் பாதிக்கப்படும் என்பதுதான் இந்திய அரசின் அச்சம். எனவே ஆண்டர்சனுக்கு இப்போது 88 வயதாகிவிட்டது என்பது காரணமாக சொல்லப்படுகிறது. முதுமையைக் காரணம் காட்டி எந்த அயோக்கியர்களையும் மன்னித்துவிட முடியாது.

1984 டிசம்பர் 3 அன்று போபால் யூனியன் கார்பைட் ஆலையில் இருந்து 40 டன் விஷவாயு கசிந்து பரவியதில் பொது மக்களில் 25 ஆயிரம் பேர் வரை இறந்ததாக மதிப்பிடப்பட்டது. மேலும் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். தலை முறை தலை முறையாக அவர்களின் துன்பம் தொடகிறது. தொடர்ந்த போராட்டம், வழக்குகளுக்குப் பின்னர், யூனியன் கார்பைட் நிறுவனம் மொத்தமாக 713 கோடி ரூபாய் நஷ்ட ஈடை இந்திய அரசிடம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டது. இதை பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு விநியோகித்தபோதுதான் தெரிந்தது, முதலில் மதிபிட்டதை விட பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த தொகை சராசரியாக வெறும் 12 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் நடைப் பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாத சம்பளம் 1500 ரூபாய் கூட கிட்டாத நிலையில் இருக்கும் இவர்கள் மாதாமாதம் 400 ரூபாய்க்கு மருந்துகள் சாப்பிட்டாக வேண்டும்.

டெல்லி சினிமா தியேட்டர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த நஷ்ட ஈடு இதை விட அதிகம். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு 15 லட்ச ரூபாயும் கயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் தரப்பட்டது. தாமதமாக தந்த நஷ்ட ஈடுக்கு வட்டியும் தரும்படி நீதி மன்றம் உத்தரவிட்டது. போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 வருடங்களாகத் தொடரும் துயரத்தில் மரணம்தான் ஆறுதல்.

ஆலையின் பிரச்சினை இன்னமும் முடியவில்லை. சுமார் 90 ஏக்கர் பரப்பளவுள்ள ஆலை வளாகத்தில் இன்னும் சுமார் 500 டன் ரசாயனங்கள் கிடக்கின்றன. யூனியன் கார்பைட் ஆலையை இயக்கிய காலத்திலேயே ஆபத்தான ரசாயனங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்காமல் நிலத்தில் கசிய விட்டிருந்தது. இப்போதும் அது தொடர்கிறது. ஆலை வளாகம் இப்போது அரசின் வசம் உள்ளது. அதைத் தூ ய்மைப்படுத்தும் செலவும் அரசுடையதுதான். அதை ரியல் எஸ்டேட்டாக மாற்றி வணிகவளாகமாக்க மத்தியப் பிரதேச அரசு யோசித்து வருகிறது. ஆனால் அதற்கு முன்பு நிலத்தடியில் கசிந்திருக்கும் ரசாயனங்களால் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை என்ன செய்வதென்று தெரியவில்லை. எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிர அரசுக்கும் வேறு எதுவும் தெரியவில்லை.

ஆனால் ஆலை வளாகத்துக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கூட நச்சு ரசாயனங்கள் பரவி குடி நீரைக் கெடுத்துள்லன என்பது டெல்லியின் அறிவியல் சூழல் மையத்தின் ஆய்வில் இப்போது தெரியவந்திருக்கிறது. ஆனால் அரசு குடி நீர் பாதிக்கப்படவிலை என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

யூனியன் கார்பைட்கம்பெனியை வாங்கிய டவ் நிறுவனம் போபாலின் தொடரும் துயரங்களுக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்று சொல்கிறது. அமெரிக்காவில் யூனியன் கார்பைடின் அஸ்பெஸ்டாஸ் பாதிப்புக்கு பொறுப்பேற்ற டவ், இந்தியாவில் மட்டும் பொறுப்பை மறுக்கிறது. சூழல் பாதுகாப்புப் போராளிகள் 25 வருடங்களாக யூனியன் கார்பைடையும் டவ் கெமிகல்சையும் எதிர்த்து போராடி வருகிறாரகள். டவ் கெமிகல்ஸ் இப்போது தமிழ் நாட்டிலும் இரு இடங்க்ளில் ஆலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஹிந்து ஏடு நடத்தும் நவம்பர் இசை விழாவுக்கு டவ் ஒரு ஸ்பான்சர்.

போபால் பாடங்களை நம் சமூகம் இன்னமும் கற்றுக் கொள்ளவே இல்லை. பெரும் நிறுவனங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்ற மன நிலையிலேயே இயங்குகின்றன. அதற்கு அரசுகளும் அரசியல்வாதிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். மக்களின் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.சின்ன அளவிலாவது நம் எதிர்ப்பை தெரிவிக்கப் பழக வேண்டும். போபால் கொடூரத்தையடுத்து உருவான சூழ்ல இயக்கங்களின் தாக்கத்தால் நானும் இன்னும் பல நண்பர்களும் 25 வருடங்களாக யூனியன் கார்பைடின் எவரெடி பொருட்களைப் புறக்கணித்தே வந்திருக்கிறோம். கூட்டாக காட்டும் எதிர்ப்புதான் உடனடி பயனைத் தரும் என்பதற்காக ஒவ்வொரு தனி நபரும் செய்யக் கூடிய தார்மிக எதிர்ப்பைக் கைவிடத் தேவையில்லை.தனி நபராகக் காட்டும் தார்மிக எதிர்ப்பு நம்மை கோடானு கோடி புழுக்களில் இன்னொரு புழுவாக ஆக்கிவிடாமல் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

இன்றைய மன்மோகன்சிங் ஆட்சியில் போபால் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வரும் வாய்ப்பே இல்லை. நமக்கு வெகு பக்கத்தில் ஒரு போபால் காத்துக் கொண்டிருக்கிறது. கடலூர் ! ஊழல் அரசியல்வாதிகளின் உதவியுடன் எந்த விதியையும் வளைத்துவிட்டு லாபம் மட்டுமே குறியாக் இருக்கும் பெரும் கம்பெனிகளின் இன்றைய வேட்டைக்காடுகளில் ஒன்று கடலூர். இது போபாலானால் தமிழகம் தாங்காது.