Tuesday, June 22, 2010

முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சி


போபால் விஷவாயுவால் இறந்தவர் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக நிவாரணம் தருவது மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, தனது பரிந்துரைகளை பிரதமர் மன்மோகனிடம் திங்கள்கிழமை அளித்துள்ளது. மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான இந்த அமைச்சர்கள் குழு, பத்து நாள்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி பிரதமர் கோரியிருந்தபோதிலும், ஒருநாள் முன்னதாகவே அளித்துள்ள வேகம் பாராட்டுக்குரியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், பரிந்துரைகள் அரசின் தவறுகளை மூடி மறைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக இருக்கிறது என்பதும் பல யூகங்களுக்கு இடமளிக்கும் வகையில் அமைந்திருப்பதையும் காணும்போது, வருத்தமே மிஞ்சுகிறது.முதலாவதாக, போபால் விஷவாயுவால் இறந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், நிரந்தரமான ஊனமுற்ற நபர்களுக்கு ரூ.5 லட்சம், ஓரளவு ஊனமுற்றோருக்கு ரூ.3 லட்சம் என்று இந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே இவர்கள் பெற்ற தொகையைக் கழித்துக்கொண்டு, இந்த நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று பரிந்துரையில் தெரிவித்துள்ளனர். அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்று- அதிக நிவாரணத்தொகை பெற்றுத்தருவது என்பது. அப்படியிருக்க, எதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட சொற்ப நிவாரணத் தொகையை இதில் கழிக்க வேண்டும் என்பது புரியவில்லை.மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, விஷவாயுவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் என்கிற செய்தி மட்டுமே உலகத்தாருக்குப் போய்ச் சேரும். ஆனால், அங்கே பாதிக்கப்பட்டவர்களிடம் "முன்பு பெற்ற உதவித்தொகை தொடர்பான ஆவணத்தைக் காட்டுங்கள், அதைக் கழித்துக்கொண்டு மீதிப் பணத்தைத் தருகிறோம்' என்று அரசு இயந்திரம் கறாராகச் சொல்லும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனை பேர் பழைய நிவாரணத் தொகை விவரங்களைச் சான்றுகளுடன் வைத்திருப்பார்கள்? இத்தகைய சிக்கலுக்கே வழி இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், அவர்கள் முன்பு பெற்ற நிவாரண உதவி எவ்வளவு என்றாலும், தற்போது கூடுதலாக அளிக்கப்படும் என்ற அறிவிப்பை அரசு செய்வதுதான் முறையானதாக இருக்கும்.இரண்டாவதாக, போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள சுமார் 300 டன் நச்சுப்பொருளை அகற்றி, அப்பகுதியில் மீண்டும் நல்வாழ்வுக்கான சூழலை ஏற்படுத்துவது என்பதும் இந்தக் குழுவின் நோக்கமாகும். இதற்காக ரூ.250 கோடி செலவிடப்படும் என்று இக்குழு தெரிவித்துள்ளது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இந்தியப் பங்குகளை டெü நிறுவனம் வாங்கியபோது, நீதிமன்ற உத்தரவின்படி டெü நிறுவனம் இங்குள்ள நச்சுக்களை அகற்ற ரூ.100 கோடியை அரசுக்குச் செலுத்த வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் அத்தொகையைச் செலுத்தியதா, அல்லது அந்நிறுவனம் செலுத்திய தொகையோடு கொஞ்சம் அரசும் சேர்த்து இப்போது வழங்குகிறதா என்பதை விளக்குபவர்கள் யாருமில்லை. இந்த ஆலையில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தையும் நீக்க வேண்டிய பொறுப்பையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் அல்லது அரசு நிர்ணயிக்கும் புதிய நிவாரணத் தொகையை அளிப்பதையும் டௌ நிறுவனம் ஏற்கும்படி செய்வதுதான் முறையாகும். ஆனால், அரசியல் காரணங்களுக்காக, குறிப்பாக ராஜீவ் காந்தியின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக இந்தச் செலவுகளையும் கூடுதல் நிவாரண உதவிகளையும் அரசே ஏற்றுக்கொள்கிறது என்பதைத் தவிர, சொல்வதற்கு ஒன்றுமில்லை.இது தவிர, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவரும், பிணையில் வெளிவந்து நியூயார்க்கில் இருப்பவருமான வாரன் ஆன்டர்சனை இந்தியாவுக்கு கொண்டுவந்து விசாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும், பணியில் கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம் என்பதாக அளிக்கப்பட்ட தீர்ப்பில், இந்த வழக்கு கொலைவழக்கு என்பதாக மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்வது குறித்தும்கூட இந்தப் பரிந்துரைகள் சொல்கின்றன. இவற்றில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கும் என்பது அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொருத்துத்தான் தெரியும். அமைச்சர்கள் குழு முதல்நாள் கூடும் முன்பாகவே, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அந்த இடத்தில் நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகளுக்காக திட்டக்குழு ரூ.982 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று செய்திகள் வெளியாகின. அரசு ஆவணங்களின்படி போபால் விஷவாயுவால் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 3,000 மட்டுமே. இவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் அளித்தாலும் ரூ.300 கோடி செலவாகும். ஊனமுற்றோர், சிறிதளவு ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் நிவாரண உதவித்தொகைகளையும் சேர்த்தால் ரூ.500 கோடியை தாண்டாது. மேலும் டௌ நிறுவனம் தான் செய்ய வேண்டிய, செலவிட வேண்டிய தொகையும் -ரூ.250 கோடி- அரசாங்கமே அளித்துவிடுகிறது. இதர செலவுகளையும் சேர்த்தால், திட்டக் கமிஷன் மூலம் அரசு கொடுக்கும் ரூ.982 கோடி சரியாக இருப்பதைக் காணலாம்.மக்கள் பணத்தை வைத்து மக்கள் வாயை மூட முயற்சிக்கிறார்கள். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சி என்பதை யாராவது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சொல்லக் கூடாதா?

No comments:

Post a Comment