Saturday, April 21, 2012

பக்கா ப்ளான்-ப்ளான் பக்கா



நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே காலனியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது23). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானில் உள்ள உறவினரான தங்கவேலு என்பவரின் மகள் சத்யா (20). என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் கொடைக்கானலில் வசித்து வந்தனர்.

சரவணக்குமார் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக கடந்த 4-ந்தேதி சரவணக்குமார் தனது மனைவியுடன் நெல்லையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார். கடந்த 9-ந்தேதி காலை தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற சரவணக்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை பரமசிவன் நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில் சரவணக்குமாரை அவரது மனைவியின் காதலன் கனகராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடித்து விசாரித்தனர். அதில் சரவணக்குமாரை கொல்ல அவரது மனைவி சத்யா மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரது திட்டத்தின் படி சரவணக்குமாரை, கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் காரில் கடத்தி சென்று கழுத்தை நெறித்து கொன்று, உடலை கொடைக்கானல் மயிலாடும் பாறை மலையில் இருந்து வீசியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மலையடி வாரத்தில் அழுகிய நிலையில் கிடந்த சரவணக்குமாரின் உடலை மீட்டனர். சரவணக்குமார் கொலை தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிந்து சத்யா, அவரது காதலன் கனகராஜ், நண்பர்கள் ராஜேஷ் குமார் (23), மதன் (33), ரஞ்சித் குமார் (19) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

கனகராஜ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் சரவணக்குமாரை கடத்தி கொல்ல அவரது மனைவி சத்யாவே திட்டம் தீட்டி தன்னிடம் கூறியதால் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொன்றதாக கூறியுள்ளார். காதலன் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் சரவணக்குமாரை தீர்த்து கட்டியது பற்றி அவரது மனைவி சத்யா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திருமணத்திற்கு முன்பு சத்யாவை காதலித்த கார் டிரைவர் கனகராஜ், அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சத்யாவின் தந்தை மனைவியின் உறவினர் மகனான சரவணக்குமாரை திருமணம் செய்து வைத்து விட்டார். சரவணக்குமாரை திருமணம் செய்து கொண்டாலும் அவரை பிரிந்து சென்று காதலனுடன் வாழ சத்யா தயாராக இருந்துள்ளார்.

இதனால் காதலன் கனகராஜுடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் தான் திருமணமான புதிதில் காதலன் கனகராஜுடன் சத்யா ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசில் கடத்தல் புகார் கொடுத்ததால் சத்யா மீண்டும் திரும்பி வந்தார். அப்போதும் தனது காதலனுடன் சத்யா பேசி வந்துள்ளார். வாழ்க்கையில் தாங்கள் இணைவதற்கு தடையாக இருப்பது சரவணக்குமார்தான் என அவர்கள் கருதினர்.

ஆகையால் சரவணக்குமாரை ரகசியமாக கொலை செய்து விட்டால் வாழ்க்கையில் சேர்ந்து விடலாம் என இருவரும் நினைத்தனர். ஆகையால் அதற்கான நேரத்தை சத்யாவும், அவரது காதலனும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தான் சரவணக்குமார் மனைவி சத்யாவை நெல்லையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

தனது கணவரை தீர்த்து கட்ட இதுதான் சரியான தருணம் என நினைத்த சத்யா தனது கணவருடன் நெல்லைக்கு வந்திருப்பது குறித்து காதலன் கனகராஜுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி கனகராஜ் தனது நண்பர்களுடன் 8-ந்தேதி இரவு நெல்லை வந்தார்.

9-ந்தேதி காலை சத்யா தனது கணவரிடம் தன்னுடைய நண்பர்கள் சிலர் நம்மை பார்க்க நெல்லை வந்திருப்பதாகவும், வண்ணார்பேட்டையில் வீடு தெரியாமல் நின்று கொண்டிருப்பதாகவும் அவர்களை அழைத்து வருமாறு கூறினார். இதனை உண்மை என நம்பிய சரவணக்குமார் அங்கு சென்றார்.

அப்போது கனகராஜ் உள்ளிட்டோர் சரவணக்குமாரை கடத்தி கொன்று உடலை சாக்கு பையில் கட்டி கொடைக்கானல் மயிலாடும் பாறை மலை உச்சிக்கு தூக்கி சென்று, அங்கிருந்து பள்ளத்தில் தூக்கி வீசியுள்ளனர். அதன் பிறகு திட்டம் வெற்றிகரமாக முடிந்து விட்டதாக சத்யாவிடம் போனில் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதனால் நிம்மதி அடைந்த சத்யா அதனை வெளிக்காட்டாமல் இருந்துள்ளார். மாயமான சரவணக்குமாரை அவரது குடும்பத்தினர் தேடிய போது தனக்கு எதுவும் தெரியாதது போல் சத்யா இருந்துள்ளார். மொத்தத்தில் காதலனுடன் சேர தடையாக இருந்ததால் கணவரை தீர்த்துக்கட்ட உதவியதாக சத்யா கூறியிருந்தார். இவ்வாறு சத்யா வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறினர்.


நன்றி - மாலைமலர்


3 comments:

  1. கொலையும் செய்வாள் பத்தினி என்பது இதுதானோ?

    ReplyDelete
    Replies
    1. இங்கே நீங்கள் பத்தினி என்று சொல்லுவது, அந்த வார்த்தைக்கே இழுக்கு. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றவளுக்கு பத்தினி என்ற பட்டம் கொடுப்பது ஏற்க முடியாது.இருந்தாலும் நீங்கள் எந்த அர்த்ததில் இந்த வார்த்தையை உபயோகித்திருக்கிறீர்கள் என்பது இப்போது புரிகிறது.

      Delete
  2. இப்படிப்பட்டவர்கள் ஆரம்பத்திலேயே முடிவெடுத்து, திருமணம் செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து மற்றொருவரை திருமணம் செய்துகொண்டு, பிறகு அவரை கொலைசெய்தல் என்பது மாபெரும் குற்றம். மன்னிக்க முடியாதது.

    ReplyDelete