Sunday, May 13, 2012

மாமனார் குளோஸ்


திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களுடன் சுதர்சனின் பெற்றோர் செல்லையன்- ரெத்தினபாய் ஆகியோரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

வீட்டில் தனியாக இருந்த விஜயாவுடன் அதேபகுதியை சேர்ந்த வாலிபர் எட்வின் ஜிவி என்பவருக்கு தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலர்கள் இருவரும் இரவு நேரத்தில் விஜயாவின் வீட்டு மாடியில் ரகசியமாக சந்தித்து உறவாடி மகிழ்ந்தனர்.

கடந்த வாரம் சுதர்சன் பெங்களூரில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்தார். கடந்த 9-ந் தேதி தான் அவர் விடுமுறை முடிந்து பெங்களூர் புறப்பட்டார். இதனால் விஜயாவுக்கு கள்ளக்காதலன் எட்வின் ஜிவியை சந்திக்க முடியாமல் இருந்தது. கணவன் பெங்களூர் புறப்பட்ட தகவலை அவர் எட்வின் ஜிவிக்கு தெரிவிக்க அவர் 10-ந் தேதி இரவு விஜயா வீட்டுக்கு வந்தார்.

வழக்கம் போல பின்புறக் கதவை திறந்து கொண்டு மேல்மாடிக்கு சென்று உல்லாசமாக இருந்தனர். அப்போது இருவருக்குமிடையே நடந்த பேச்சு சத்தம் கேட்டு விஜயாவின் மாமனார் செல்லையன் திடீரென விழித்துக் கொண்டார்.

மேல்மாடியில் ஆண் குரல் கேட்பதை உணர்ந்த அவர் அங்கு சென்றார். அறைக்குள் தனது மருமகளும், வாலிபர் ஒருவரும் அரைகுறை உடையில் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்தார். அதிர்ச்சியில் உறைந்து போன அவர் அலறினார். சத்தம்கேட்டு திரும்பி பார்த்த விஜயாவும் எட்வின் ஜிவியும் அறைக்கதவின் அருகே மாமனார் நிற்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே எட்வின்ஜிவி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவர் கதவருகே நின்ற செல்லையனை மிதித்து தள்ளி விட்டு தப்பி ஒட முயன்றார்.

இதற்கிடையே மேல்மாடியில் கேட்ட அலறல் சத்தத்தால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். செல்லையனின் மனைவி ரெத்தினபாயும், கணவனின் கதறல் கேட்டு மேல்மாடிக்கு ஓடினார். அங்கு செல்லையன் கீழே விழுந்து கிடப்பதையும், அருகில் மருமகளும், இன்னொரு வாலிபரும் நிற்பதைக் கண்டார். அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்த ரெத்தினபாய் கணவரை மட்டும் கைத்தாங்கலாக கீழே அழைத்து வந்து நாற்காலியில் உட்கார வைத்தார்.

ஆனால் நாற்காலியில் இருந்த செல்லையன் சிறிது நேரத்திலேயே மார்பை பிடித்தபடி இறந்து போனார். இதற்குள் தகவலறிந்து திருவட்டார் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் விஜயாவையும், அவரது கள்ளக்காதலன் எட்வின் ஜிவியையும் பிடித்தனர்.

இந்த தகவல் பெங்களூரில் இருந்த சுதர்சனுக்கும் தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலையே அவர் அங்கிருந்து ஊருக்கு வந்தார். சம்பவத்தை முழுமையாக தெரிந்து கொண்ட அவர் மனைவி இனி வேண்டாம் என்று உறவினர்களிடம் கூறினார். சுதர்சனின் தாய் ரெத்தினபாய் தனது கணவரின் சாவுக்கு மருமகளும், அவரது கள்ளக்காதலனுமே காரணம் என்றும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். அதில் விஜயாவும், எட்வின் ஜிவியும் தாக்கியதில் தான் செல்லையன் இறந்தார் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து போலீசார் செல்லையன் மரணத்தை சந்தேகச்சாவு என்று வழக்கு பதிவு செய்து எட்வின்ஜிவி, விஜயா இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன செல்லையனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் அறிக்கை கிடைத்த பின்பே செல்லையன் எப்படி இறந்தார்? எட்வின் ஜிவி தாக்கியதில் அவர் இறந்தாரா? என்பது தெரிய வரும்.

அற்ப சந்தோஷத்திற்காக அடுத்தவர் மனைவியுடன் உல்லாசமாக இருந்து வழக்கில் சிக்கிய எட்வின்ஜிவி எம்.காம். பட்டதாரி ஆவார். இவருக்கு பெற்றோர் சமீபத்தில் தான் பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்தனர்.

குடும்ப வாழ்வை தொடங்க இருந்த நேரத்தில் அவர் வழக்கில் சிக்கிக்கொண்டது இது போல தடம் மாறுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

நன்றி - மாலைமலர்

Saturday, April 21, 2012

பக்கா ப்ளான்-ப்ளான் பக்கா



நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே காலனியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது23). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானில் உள்ள உறவினரான தங்கவேலு என்பவரின் மகள் சத்யா (20). என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் கொடைக்கானலில் வசித்து வந்தனர்.

சரவணக்குமார் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக கடந்த 4-ந்தேதி சரவணக்குமார் தனது மனைவியுடன் நெல்லையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார். கடந்த 9-ந்தேதி காலை தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற சரவணக்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை பரமசிவன் நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில் சரவணக்குமாரை அவரது மனைவியின் காதலன் கனகராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடித்து விசாரித்தனர். அதில் சரவணக்குமாரை கொல்ல அவரது மனைவி சத்யா மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரது திட்டத்தின் படி சரவணக்குமாரை, கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் காரில் கடத்தி சென்று கழுத்தை நெறித்து கொன்று, உடலை கொடைக்கானல் மயிலாடும் பாறை மலையில் இருந்து வீசியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மலையடி வாரத்தில் அழுகிய நிலையில் கிடந்த சரவணக்குமாரின் உடலை மீட்டனர். சரவணக்குமார் கொலை தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிந்து சத்யா, அவரது காதலன் கனகராஜ், நண்பர்கள் ராஜேஷ் குமார் (23), மதன் (33), ரஞ்சித் குமார் (19) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

கனகராஜ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் சரவணக்குமாரை கடத்தி கொல்ல அவரது மனைவி சத்யாவே திட்டம் தீட்டி தன்னிடம் கூறியதால் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொன்றதாக கூறியுள்ளார். காதலன் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் சரவணக்குமாரை தீர்த்து கட்டியது பற்றி அவரது மனைவி சத்யா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திருமணத்திற்கு முன்பு சத்யாவை காதலித்த கார் டிரைவர் கனகராஜ், அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சத்யாவின் தந்தை மனைவியின் உறவினர் மகனான சரவணக்குமாரை திருமணம் செய்து வைத்து விட்டார். சரவணக்குமாரை திருமணம் செய்து கொண்டாலும் அவரை பிரிந்து சென்று காதலனுடன் வாழ சத்யா தயாராக இருந்துள்ளார்.

இதனால் காதலன் கனகராஜுடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் தான் திருமணமான புதிதில் காதலன் கனகராஜுடன் சத்யா ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசில் கடத்தல் புகார் கொடுத்ததால் சத்யா மீண்டும் திரும்பி வந்தார். அப்போதும் தனது காதலனுடன் சத்யா பேசி வந்துள்ளார். வாழ்க்கையில் தாங்கள் இணைவதற்கு தடையாக இருப்பது சரவணக்குமார்தான் என அவர்கள் கருதினர்.

ஆகையால் சரவணக்குமாரை ரகசியமாக கொலை செய்து விட்டால் வாழ்க்கையில் சேர்ந்து விடலாம் என இருவரும் நினைத்தனர். ஆகையால் அதற்கான நேரத்தை சத்யாவும், அவரது காதலனும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தான் சரவணக்குமார் மனைவி சத்யாவை நெல்லையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

தனது கணவரை தீர்த்து கட்ட இதுதான் சரியான தருணம் என நினைத்த சத்யா தனது கணவருடன் நெல்லைக்கு வந்திருப்பது குறித்து காதலன் கனகராஜுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி கனகராஜ் தனது நண்பர்களுடன் 8-ந்தேதி இரவு நெல்லை வந்தார்.

9-ந்தேதி காலை சத்யா தனது கணவரிடம் தன்னுடைய நண்பர்கள் சிலர் நம்மை பார்க்க நெல்லை வந்திருப்பதாகவும், வண்ணார்பேட்டையில் வீடு தெரியாமல் நின்று கொண்டிருப்பதாகவும் அவர்களை அழைத்து வருமாறு கூறினார். இதனை உண்மை என நம்பிய சரவணக்குமார் அங்கு சென்றார்.

அப்போது கனகராஜ் உள்ளிட்டோர் சரவணக்குமாரை கடத்தி கொன்று உடலை சாக்கு பையில் கட்டி கொடைக்கானல் மயிலாடும் பாறை மலை உச்சிக்கு தூக்கி சென்று, அங்கிருந்து பள்ளத்தில் தூக்கி வீசியுள்ளனர். அதன் பிறகு திட்டம் வெற்றிகரமாக முடிந்து விட்டதாக சத்யாவிடம் போனில் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதனால் நிம்மதி அடைந்த சத்யா அதனை வெளிக்காட்டாமல் இருந்துள்ளார். மாயமான சரவணக்குமாரை அவரது குடும்பத்தினர் தேடிய போது தனக்கு எதுவும் தெரியாதது போல் சத்யா இருந்துள்ளார். மொத்தத்தில் காதலனுடன் சேர தடையாக இருந்ததால் கணவரை தீர்த்துக்கட்ட உதவியதாக சத்யா கூறியிருந்தார். இவ்வாறு சத்யா வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறினர்.


நன்றி - மாலைமலர்