சென்னை அபிராமபுரம் கோவிந்தசாமி நகர் கட்ட பொம்மன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (34). பந்தல் போடும் தொழிலாளி. இவருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அபிராமபுரத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். கஸ்தூரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. கணவர் பெயர் ஆறுமுகம் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர்.
கஸ்தூரி தனது மகளை தாய் வீட்டில் ஒப்படைத்து விட்டு லோகநாதனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஆறுமுகம் மனைவியைத் தேடி அபிராமபுரம் வந்தார். லோகநாதனை சந்தித்து மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறினார். கஸ்தூரியையும் தன்னுடன் வருமாறு அழைத்தார். அதற்கு இருவரும் மறுத்து விட்டனர்.
நேற்று இரவு 11.30 மணிக்கு ஆறுமுகம் மீண்டும் வந்து லோகநாதனிடம் மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறினார். அனுப்ப மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை குத்தினார்.
இதில் கத்திக்குத்து பட்ட லோகநாதன் அதே இடத்தில் இறந்தார். பின்னர் ஆறுமுகம் கத்தியுடன் போய் அபிராமபுரம் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.